இராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர்  கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகில் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வீரணன் என்பவரின் மகன் தாமரைக்கனி. தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்தி கணேஷ் மகன் கணபதி சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையே தாமரைக்கனி -யின் நண்பன் கருப்பசாமிக்கு கடந்த மாதம் முன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பேண்ட் செட் ( ட்ரம்ஸ் ) புக்கிங் செய்ய  அப்பகுதியில் பேண்ட் செட் இசைக்குழு வைத்துள்ள கணபதி சங்கரை நாடாமல் வேறொரு இசைக் குழுவை நாடியுள்ளனர்.

 ஏற்கனவே தாமரைகனிக்கும் கணபதி சங்கருக்கும் பிரச்சனை இருந்த நிலையில் இவர்களை புக்கிங் செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் வேறு ஒரு பேண்ட் செட் குழுவை ஏற்பாடு செய்துள்ளனர் . இந்நிலையில் சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட தாமரைக்கனி மற்றும் அவரது நண்பர்கள் நிகழ்ச்சி அன்று ட்ரம்செட் முன் ஆடி சென்ற பொழுது கணபதி சங்கருக்கும், தாமரைக்கனி-க்குமிடையே மோதல் உருவானது.  இதை உடனடியாக ஊர் பொதுமக்கள் சேர்ந்து சமாதானம் செய்து வைத்துள்ளனர்.  இதற்கிடையே நேற்று காலை தாமரைக்கனி தனது நண்பரைக் காண சென்ற பொழுது கணபதி சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து தாமரைக்கனி-யை அடித்து கத்தியால் குத்தியதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

உடனே அருகிலிருந்தவர்கள் மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது தாமரைக்கனி உயிரிழந்துள்ளார். இந்த கொலை சம்பந்தமாக கணபதி சங்கர் மற்றும் அவரது தந்தை சக்தி கணேஷ்,  உறவினர்கள் கணேஷ் குமார், செந்தில்குமார், மற்றும்  அவரது தந்தை அண்ணாமலை ஈஸ்வரன் (இவர் திமுக ஒன்றியக் கவுன்சிலராக உள்ளார்), இவர் மட்டுமல்லாமல் ஜெய் கணேஷ் உள்ளிட்ட 6 பேரை  போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் சிறையில் அடைத்தனர். அரசியலில் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலராக இருந்து வரும் நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.