அதிமுகவின் கடைசி முழுமையான பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டங்கள் இல்லை என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில், 110 விதியின் கீழ் அதிரடியான திட்டங்களை அறிவிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக  கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட முடியும். அந்த விதியின் கீழ் வெளியிடும் அறிவிப்புகள் குறித்து பேரவையில் விவாதிக்க முடியாது. ஆனால், பாராட்டு தெரிவிக்க முடியும். கடந்த காலங்களில் பேரவை நடக்கும் காலங்களில் ஜெயலலிதா தினந்தோறும் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடுவார். அது தினந்தோறும் முக்கிய செய்தியாக ஊடகங்களில் இடம் பிடிக்கும். ஜெயலலிதாவின் இதே பாணியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பின்பற்றிவருகிறார்.


சட்டப்பேரவை நடக்கும் காலத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிடுவது வழக்கம். பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்தான் அதிமுக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். எனவே தேர்தலையொட்டி கடைசி முழுமையான பட்ஜெட்டில் கவர்ச்சிக்கரமான திட்டங்களும் மக்களைக் கவரும் விதமான அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்த பட்ஜெட்டில் கவர்ச்சித் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. காவிரி - வெள்ளாறு இணைப்பு, அத்திக்கடவு-அவினாசி திட்டம் உள்பட சில முக்கியமான திட்டங்கள் மட்டுமே அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. தேர்தலை எதிர்கொள்ள உள்ள சூழ்நிலையில் ஆளுங்கட்சி மக்களைக் கவரும்விதமாக அறிவிப்புகள் இல்லையே என்ற முணுமுணுப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியிலேயே எழுந்துள்ளது.
இந்நிலையில் பட்ஜெட்டில் இடம் பெறாத அதிரடியான திட்டங்களை 110 விதியின் கீழ் வெளியிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருப்பதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்ஜெட்டிலேயே இடம் பெறும் வகையில் 24 கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட அதிகாரிகள் முதல்வரின் பார்வைக்குக் கொண்டு சென்றதாகவும், அந்த அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அவர் வெளியிட முடிவு செய்ததால், அவை பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்றும் கோட்டை வட்டாரங்களில் பேசப்படுகின்றன.


ஓபிஎஸ் வாசிக்கும் பட்ஜெட்டுக்கு முக்கியத்துவம் கிடைக்காமல், தன் அறிவிப்புக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வேண்டும் என்பதற்காகவே புதிய அறிவிப்புகளை வெளியிடவே முதல்வர் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அதிரடியான அறிவிப்புகளை முதல்வர் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கலாம்.