மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். நேற்று மாலை மயிலாடுதுறையில் பிரசாரம் மேற்கொண்ட பழனிச்சாமி, இரவில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
தஞ்சாவூர் தொகுதி தமாகா வேட்பாளர் நடராஜனுக்கு ஓட்டு சேகரிக்க ஒரத்தநாடு பகுதிக்கு இரவு 9 மணியளவில் முதல்வர் பழனிசாமி வந்தார். வேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்க, அருகே வேட்பாளர் நடராஜனும். மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்தியலிங்கமும் நின்றுகொண்டிருந்தார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய பிரசார வேனுக்கு பின்புறம் இருந்து யாரோ மர்ம நபர் செருப்பை வீசினார். செருப்பு யார் மீதும் படாமல் வேனின் பின் பகுதியில் விழுந்தது.

செருப்பு வீசப்பட்டதை காவல் துறையினர் யாரும் கவனிக்காததால்,  பிரசாரம் முடியும் வரை செருப்பு பிரசார வேனிலேயே இருந்தது. பிரசாரம் முடியும் தருவாயில்தான் செருப்பு வீசப்பட்டது தெரியவந்தது. இதனால், அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர். முதல்வர் மீது செருப்பு வீசியது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.