திமுக சார்பில் தூத்துக்குடியில் கனிமொழியும் வேலூரில் கதிர் ஆனந்தும் போட்டியிடுகிறார்கள். இருவரும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளார்கள். இந்நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கனிமொழி, கதிர் ஆனந்துக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை சட்டப்படியும் நியாயமான முறையிலும் நடத்தும் வகையில் பறக்கும் படை சிறப்பு குழுக்களை ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். பிரசாரக் கூட்டத்தில் பல்வேறு இடங்களில் அவருக்காக, திமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்கிறார்கள். கடந்த மாதம் 27-ம் தேதி வேப்பலோடை கிராமத்தில் கனிமொழிக்கு ஆரத்தி எடுத்தபோது வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுகிறது. கதிர் ஆனந்த் வீடு மற்றும்  அவருடைய ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கதிர் ஆனந்த் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

.
ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை வைத்துள்ளவர்களின் நம்பிக்கையை கனிமொழி, கதிர் ஆனந்த்தின் செயல்பாடு சீர்குலைய செய்துள்ளது. எனவே அவர்களை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி இழப்பு செய்ய வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 5-ந்தேதி மனு அனுப்பினேன். அந்த மனுவின் அடிப்படையில் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தகுதி இழப்பு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த மனுவை விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்றுள்ளது. எனவே தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை ஐகோர்ட்டு அமர்வில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.