குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் ஆதரவாகவும் பொதுக்கூட்டங்களும் பேரணிகளும் நடைபெறுகிறது. பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சில குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக சார்பாக திருப்பூரில் நாளை பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் சிடிசி பகுதியில் தொடங்கும் பேரணி, அங்கிருந்து பெரியக்கடை வீதி வழியாக செல்கிறது. பேரணி செல்லும் பெரியக்கடை வீதியில் ஏராளமான பிரியாணி கடைகள் இருக்கின்றன. இதையடுத்து பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பாக காவல்துறையில் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், 'வரும் 28 ஆம் தேதி பெரியக்கடை வீதி வழியாக பாஜகவினர் பேரணி செல்ல உள்ளனர். 

image

அதனால் எங்களது பிரியாணி கடைக்கும் பிரியாணி அண்டாவிற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்' என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலைசெய்யப்பட்டார். அப்போது நடைபெற்ற ஊர்வலத்தில் இஸ்லாமியர்களின் கடைகளில் இருந்து பிரியாணி அண்டா திருடப்பட்டதாக பரபரப்பு கிளம்பியது. அதனடிப்படையில் தற்போது பாதுகாப்பு கேட்டு மனு அளித்திருப்பதாக பெரிய கடை வீதியில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.