தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பது போடப்பட்டது. தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகள் ஜனவரி 2 ம் தேதி  எண்ணப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி அன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி மறுநாள் நண்பகல் கடந்தும் நீடித்தது.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தநிலையில் உள்ளாட்சித்தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள் மறைமுக தேர்தல் மூலம் மாவட்ட மற்றும் ஒன்றிய தலைவர், துணை தலைவர்களை தேர்தெடுக்கும் நிகழ்வு இன்று காலை தொடங்கி முடிவுகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி கம்பம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை பாஜக கைப்பற்றி இருக்கிறது. அங்கு அக்கட்சியின் பழனி மணி வெற்றி பெற்றுள்ளார்.

கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 4 வார்டுகள் இருக்கிறது. அவற்றில் அதிமுக இரண்டு இடங்களிலும் திமுக ஒரு இடத்திலும் பாஜக ஒரு இடத்திலும் வென்றுள்ளது. கம்பம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அதிமுக பெரும்பான்மை பெற்ற போதும் வென்றவர்கள் இருவரும் ஆண்கள். இதையடுத்து பாஜக சார்பாக பெண் வேட்பாளர் பழனி மணி தலைவர் பதவிக்கு அதிமுக ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.