பாஜக தலைவராக பட்டியலினத்தவரை நியமித்து தனது சாதிய கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது அக்கட்சி தலைமை. 

கடந்த செப்.1ம் தேதி முதல் தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது. தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்ட பின்னர், அந்தப் பதவி காலியாக இருந்து வந்தது. அந்தப்பதவிக்கு அரை டஜன் நிர்வாகிகளின் பெயர்கள் அடிபட்டு வந்தன. ஏ.பி.முருகானந்தம், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மேல்சாதி நிர்வாகிகளின் பெயர்கள் அடிபட்டன. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பெயரும் இடம்பெற்று இருந்தது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில்  தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் துணை தலைவர் எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இது அக்கட்சினருக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக பாஜக உயர்சாதிவர்க்கத்தினருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கருத்துக்கள் உண்டு. ஆகையால் தமிழகத்தில் கணிசமான மக்கள் தொகை கொண்ட சாதியினரில் ஒருவருக்கு தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் தாமரையை மலர வைத்தே ஆக வேண்டும் என்கிற வைராக்கியத்தில் இருக்கும் பாஜக தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவரை தலைவராக்கி இருக்கிறது. 

இதன் மூலம் சாதிக் கட்சி தலைவர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது பாஜக. திருமாவளவன் போன்ற சாதி கட்சி தலைவர்கள் பாஜகவை தமது சமூக மக்களுக்கு பாஜக எதிரான கட்சி என முழங்கி வந்தனர். இதனை வைத்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்தனர். இந்நிலையில் அவர்களது சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளது பாஜக. இதன் மூலம் இனி தங்களது சமுதாய மக்களிடம் பாஜக தமக்கு எதிரான கட்சி என திருமாவால் முன்பை போல வெளிப்படையாக சொல்லி அரசியல் நடத்த முடியாது. 

இதன் மூலம், தமது கட்சிக்கு எதிரான நிலையில் உள்ள அந்த சமூக மக்களிடம் ஸ்கோர் செய்யலாம் என்கிற திட்டத்துடன் பாஜக இந்த முடிவை அறிவித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை திமுக பெரும்பான்மையாக அள்ளிச்செல்லும். அதனை தடுக்கவும் பாஜக இந்த முயற்சியை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் தனது முகத்தை மாற்றி பாஜக தாழ்த்தப்பட்ட மக்களின் காவலன் என்கிற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம். ஆக மொத்தத்தில் தமிழகத்தில் காலூன்ற மாபெரும் திட்டத்துடன் பாஜக தலைவர் பதவிக்கு தலைவர் பதவி பட்டியலிலேயே இல்லதாத பட்டியலினத்தை சேர்ந்தவரை தேர்வு செய்திருக்கிறது பாஜக.