எதிர்க்கட்சிகளின் பலமான எதிர்ப்பையும் மீறி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன்  அது சட்டமாக்கப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

வடமாநிலங்கள் மற்றும் டெல்லியில் காங்கிரஸ், இடது சாரிகள், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் மற்றும் மாணவர்கள், இஸ்லாமியர்கள் என பொது மக்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இத்தகைய கடும் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தை பாஜக முடுக்கி விட்டுள்ளது.  அதன் ஒரு பகுதியாக  பாஜக தொண்டர்கள்  நாடு முழுவதும் வீடுவீடாக சென்று குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவே நேரடியாக பல வீடுகளுக்குச் சென்று சிஏஏ குறித்து விளக்கம் அளித்து வருகிறார். இது போல் பாஜக தொண்டர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பேரணி நடத்த வேண்டும் எனவும் அக்கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக  ஈரோட்டில்  பாஜக சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.  பாஜக தேசிய இளைஞரணி   துணைத் தலைவர் ஏ.பி. முருகானந்தம்  தலைமையில்  நடைபெற்ற இந்த பேரணி ஈரோடு வ.உ.சி.பூங்காவில் தொடங்கி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தும்,  எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை கண்டித்தும் பேரணியில் முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. காவல் துறையினரின் அனுமதியுடன் நடைபெற்ற இந்த பேரணியில் 5000 ற்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர். இதில் வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய  பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.