பிப்ரவரி மாதத்திலேயே வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தியிருந்தால் இப்போது குழப்பமே ஏற்பட்டிருக்காது என்று மத்திய அரசை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.


கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் அதிகரித்துவருகின்றனர். தமிழகத்திலும் எண்ணிக்கை கூடிவருகிறது. டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால் எண்ணிக்கை கூடியுள்ளதாக சர்ச்சையாகிவருகிறது. இந்த மாநாட்டில் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலிருந்தும் பலர் பங்கேற்றார்கள். இந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 1,131 பேரில் 515 பேர் கண்டறியப்பட்டுள்ளது. 616 பேரை தேடும் பணியில் சுகாதாரத்துறையும் காவல் துறையும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருவதற்கு பிப்ரவரி மாதமே தடை விதித்திருந்தால் தப்ளிகி மாநாடு தொடர்பாக  தற்போது குழப்பம் ஏற்பட்டிருக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “(பிப்ரவரி 1ம் தேதி) வெளிநாட்டவர்கள் முன்கூட்டியே வர தடை விதிக்கப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளிலிருந்து திரும்பிய இந்தியர்களை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தியிருந்தால் இந்தக் குழப்பமே எழுந்திருக்காது. இந்த தடை ஏன் தாமதமானது?” என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பிப்ரவரி மாதமே தெரிந்த உடனேயே தனிமைப்படுத்தும் அறிவிப்பை மத்திய அரசு ஏன் மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனம் வைக்கப்பட்டுவரும் நிலையில், பாஜக மூத்த  தலைவரே மத்திய அரசு மீது குறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.