பாபா ஆசி... பாம்பு ராசி... சினிமா டூ அரசியல்...ஷிப்ட் ஆன செண்டிமெண்ட்!
பாபா முத்திரையும், பாம்பு படமெடுப்பும் ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு அச்சாரமிடுவது போல் அமைந்திருக்கிறது.
இமயமலையில் வாழும் சித்தர் என்று கருதப்படுபவர் பாபாஜி. அவரது கதையை மையமாக வைத்தே ரஜினி பாபா என்ற படத்தையும் எடுத்தார். அந்தப் படத்தில் அவர் காட்டிய முத்திரை, தமிழர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. அதுவே பின்னாளில் ரஜினியின் ஒரு அடையாளமும் ஆகிப் போனது.
வலது கையின் ஆள் காட்டி விரலையும், சுண்டு விரலையும் உயர்த்தி, நடுவில் உள்ள மற்ற 3 விரல்களையும் மடக்கிக் காட்டுவதே இந்த முத்திரை. இதற்கு அபான முத்திரை என்று பெயராம்.
இந்த முத்திரையை முறைப்படி செய்தால் உடல், உயிர், அறிவு மூன்றிலும் சிலிர்ப்பு ஏற்பட்டு பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். தற்போது, ஆன்மிக அரசியலை மேற்கொள்ளப் போவதாகக் கூறியுள்ள ரஜினிக்கு இந்த பாபா முத்திரை சின்னம் கை கொடுக்கும் என்கிறார்கள். எனவே இதையேகூட அவர் தனது கட்சியின் சின்னமாக வைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் சமூக வலைத்தளங்களில் பலரும் பாபா முத்திரை சின்னம் குறித்து விமர்சித்து வந்தனர்.
அடுத்து, ரஜினி தேர்வு செய்த இந்த முத்திரை சின்னத்தின் மீது, திடீரென நேற்று, ஒரு நாகம் வளைந்திருப்பது போல் மாற்றி அமைக்கப்பட்டது. பாபா முத்திரை சின்னத்தைச் சுற்றிலும் தலையைத் தூக்கிக் காட்டும் பாம்பும், தொடர்ந்து வாலும் பாதுகாப்பாக இருப்பது போல் அமைந்திருந்தது. இதைக் கண்டு பலருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும். ஆனால், ரஜினிக்கும் பாம்புக்கும் உள்ள தொடர்பை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியப் பட மாட்டார்கள்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு வழக்கமாக வருபவர் ரஜினிகாந்த். நேற்று ஆங்கிலப் புத்தாண்டு தினம் என்பதால் மடத்தில் நல்ல கூட்டம். அப்போது தியானம் செய்யப் படும் பிரதான கோயிலில், பக்தர்களுடன் ரஜினியும் வெள்ளை உடை சகிதம் அமர்ந்திருந்தாராம். இதைக் கண்ட மடத்து நபர்கள், மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தரிடம் சொல்ல, அவரும் அங்கே வந்து சற்று நேரம் காத்திருந்து, பின்னர் ரஜினியை தனது அறைக்கு அழைத்துச் சென்றாராம்.
அங்கே மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தர் அன்பர்களுக்கு ஆசி அளித்துக் கொண்டிருக்க, அப்போது வந்த ரஜினியிடம் கௌதமானந்தர் பேசியுள்ளார். ஆன்மிக அரசியல் என்ற வார்த்தையுடன் முன்னெடுத்துள்ள அவருக்கு தனது ஆசிகளைத் தெரிவித்த சுவாமி கௌதமானந்தா, அவருக்கு தியானம் பற்றிய சில நுட்பங்களையும் சொல்லி புத்தகங்களைப் பரிசளித்துள்ளார்.
அப்போதுதான் மடத்தின் இலச்சினையை பார்த்துள்ளார் ரஜினி. அவருக்கும் இதே போன்ற எண்ணம் எழுந்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள பேளூர் மடத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ராமகிருஷ்ணா மடத்தின் இலச்சினையில், சூரியன் உதிக்கும் பின்னணியில் உள்ள தடாகத்தில் தாமரையும், வாத்தும் உள்ளது. அதைச் சுற்றி வட்டமாக பாம்பு படம் எடுத்திருப்பது போல் இருக்கும். அதே போன்று தனது பாபா முத்திரையிலும் ஒரு பாம்பு சுற்றி இருப்பது போல ரஜினி வடிவமைக்கச் சொல்லிவிட்டாராம்.
உண்மையில் ரஜினியின் படங்களில் பாம்புக் காட்சிகள் இயல்பாக வரும். அல்லது வலியத் திணிக்கப் படும். அவரது படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் பாம்புக்கும் காட்சிக்கும் என்ன தொடர்பு என்று புரிந்து கொள்ளாமலும் புரிந்து கொண்டும் நகர்ந்து விடுவார்கள். ஆனால், பாம்பு ஏதாவது ஒரு காட்சியில் வந்தால் போதும் படம் ஓடிவிடும் என்ற ராசி ரஜினி படத்தில் தொற்றிக் கொண்டிருந்தது. அந்த ராசி இப்போது அரசியலுக்கும் வந்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது.