ரஜினியை முதல்வராக ஏற்றுக்கொண்டால் கமலை கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத்தேர்தலில் ரஜினியும் கமலும் இணைந்து செயல்பட உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தின் நலனுக்காகத் தேவைப்பட்டால் இருவரும் இணைந்து செயல்படுவோம் என்று ரஜினியும் கமலும் பரஸ்பரம் தெரிவித்தனர். இந்த அறிவிப்பு வெளியானபோது ரஜினியும் கமலும் இணைந்து செயல்பட்டாலும், கமல்தான் முதல்வர் வேட்பாளர் என்று அக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஜினியை மிகத் தீவிரமாக ஆதரித்துவரும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், ரஜினியை முதல்வராக கமல் ஏற்றுக்கொண்டால், அவரைக் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சிவகாசியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “2021 -ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆட்சியை கைப்பற்றுவது மட்டுமே இந்து மக்கள் கட்சியின் நோக்கம் அல்ல. ஆன்மீக அரசியலை கோலோச்சுவதுதான் நோக்கம்.

 
ரஜினியை முதல்வராக ஏற்போரை ஓரணியாகத் திரட்டுவோம். அதை ஏற்று கமல் வந்தால் நிச்சயமாக கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்” என்று கூறினார்.