சென்னை ராயப்பேட்டை பகுதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அமமுக கட்சி அலுவலகத்தை பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று திறந்து வைத்தார்.

சென்னை அசோக் நகரில் அமமுகவின் கட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் சொந்த கட்டிடம். இவர் சமீபத்தில் அமமுகவில் இருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தாய் கழகத்தில் இணைந்தார். இதனால் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்குள் புதிய கட்சி அலுவலகத்தை தொடங்க வேண்டும் தீர்மானித்தார். ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அதே பகுதியில் அமமுக தலைமை அலுவலகத்தை நிறுவ தீவிரம் காட்டி வந்தார். 

இந்நிலையில், ராயப்பேட்டையில் அமமுக தலைமை அலுவலகத்தை ஹை டெக் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், தொண்டர்கள், நிர்வாகிகளை தொடர்பு கொள்ளும் வகையில் பேக்ஸ், இணையம், தொலைபேசி, நிர்வாகிகளுக்கு தொலைக்காட்சிகளுடன் கூடிய அறை, ஓய்வறை உள்ளிட்ட பல வசதிகளுடன் இந்தக் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவர்களின் படங்கள் அலுவலகத்தின் முகப்பில் உள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால் அது தொடர்பான பணிகளை மேற்கொள்ள இந்த அலுவலகத்தை டி.டி.வி. தினகரன் திறந்து வைத்துள்ளார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன்;- வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இந்த கூட்டணி மிக வலுவாக அமைந்து மாபெரும் வெற்றி பெறுவது உறுதி என்றார். அமமுகவுக்கு சின்னம் மிக விரைவில் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்கும். மேலும் சசிகலா அவர்கள் மிக விரைவில் சிறையில் இருந்து வெளிவர சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தகவல் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியில் வந்த பிறகு அதிமுகவுடன் செல்லமாட்டார். எங்களுடன் தான் இருப்பார். ரஜினியின் கட்சி கொள்கை என்பது அவரின் தனிப்பட்ட கருத்து ஆகவே நாம் தலையிடுவது சரியாக இருக்காது. வடிவேலு மிகப்பெரிய ஒரு நகைச்சுவை நடிகர். ஆனால், அவர் தற்போது ஒதுங்கி இருக்க காரணம் தமிழகத்தில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் வந்துள்ளார்கள் என்பதே காரணம் என்று பல்வேறு அமைச்சர்களை சுட்டிக்காட்டி பேசினார். குடியாத்தம், திருவெற்றியூர் ஆகிய 2 தொகுதிகளில் அமமுக போட்டியிடும் என டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.