இந்திய குடியுரிமை சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்கள் இந்தியாவில் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக மாற்றக்கூடும் என சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் எச்சரித்துள்ளது .  இது சர்வதேச அளவில் இந்தியாவின் மீது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ,  குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது ,  இச்சட்டம் இஸ்லாமியர்களை குறிவைத்து கொண்டுவரப்பட்டது என அனைத்து தரப்பு மக்களும் மத்திய அரசை எதிர்த்து போராடி வருகின்றனர் .  கேரளா ,  மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இச் சட்டத்தை தங்களது மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என கூறி தங்களது சட்டமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் . 

இந்நிலையில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  இந்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக இந்தியாவில் மிகப் பெரிய போராட்டங்கள் வெடித்துள்ளன . இந்த சட்டங்கள் பாஜக அரசின் இந்துத்துவா சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .  அதேபோல் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலிருந்து விளக்கப் படுவதன் மூலம் இஸ்லாமியர்கள் இந்தியாவில்  நாடு இழந்தவர்கள் ஆவார்கள் என்றும்,   அதுமட்டுமல்லாமல் அவர்கள் நாடுகடத்தப்படவோ,   அல்லது நாட்டுக்குள்ளேயே சிறைவைக்கப்படவோ வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது .  அதேபோல் இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பாக பாஜக தலைவர்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . 

குறிப்பாக இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் நாட்டில் இருந்து அப்புறப்படுத்த படுவார்கள் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருப்பதையும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.   ஆக மொத்தத்தில் இந்தியாவில் புதிய குடியுரிமைச் சட்டம் இஸ்லாமிய சமூகத்தை மிக மோசமாக பாதிக்கும் என்று  சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   இந்த ஆணையத்தின் அறிக்கையை இந்தியா முற்றிலுமாக மறுத்துள்ளதுடன்,   தன்னுடைய வலுவான கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.  இந்நிலையில் அமெரிக்க அதிபர் இந்தியா வருகைதர உள்ளநிலையில்  3 நாட்களுக்கு முன்னதாக வெளிவந்துள்ள இந்த அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .  இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் பேர்  மற்றும் ஜார்ஜ்  ஆகியோர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்து இந்தியாவின் நிலைமை குறித்து கவலை தெரிவித்து உள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .