திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் அதிகரித்திருப்பதால், அந்நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி விமானநிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்து வைத்தது. முக்கிய விமான நிலையங்களில் இருந்து விமான போக்குவரத்தை அதிகரிப்பதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.

ஏற்கனவே ஏர் இந்தியா' விமான நிறுவனத்தின் பங்குகளை விற்பது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான, அமைச்சர்கள் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த, 2017ல், அப்போதைய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி, தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. 

தற்போது, உள்துறை அமைச்சர், அமித் ஷா தலைமையில், நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர், பியுஷ் கோயல், விமான போக்குவரத்து துறை அமைச்சர், ஹர்தீப் சிங் புரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்தார். 

அரசு எதிர்பார்க்கும் தொகைக்கு வாங்க முன்வரும் தனியாரிடம் ஏர் இந்தியா விற்கப்படும் என்றும், இதற்கான நடைமுறைகளை குறுகிய காலத்திலேயே முடிக்க அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க பலர் போட்டிபோடுவதாகவும் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார்.