பெரியகுளம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 16 வார்டுகளில் தி.மு.க.-8 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 7 இடங்களிலும் வென்றுள்ளது. டி.டி.வி.தினகரன் கட்சியான அ.ம.மு.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. அ.ம.மு.க.வின் ஆதரவை பெற இரு கட்சியினரும் கடுமையான முயற்சியில் இறங்கி உள்ளனர். பதவியேற்பு விழா முடிந்ததும் வெளியே வந்த உறுப்பினர்களை ஒன்று சேர்த்து தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்களுடன் அழைத்து சென்றனர்.

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள மயிலாடும்பாறை ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 14 வார்டுகளில் அ.தி.மு.க., தி.மு.க. 7 இடங்களில் வெற்றி பெற்று சம பலத்தில் உள்ளன. எனவே இரு கட்சிகளும் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை பிடிக்க கடுமையான முயற்சியில் இறங்கி உள்ளனர். எதிர் அணியில் உள்ள உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்து எப்படியாவது பதவிகளை பிடிக்க வேண்டும் என்று ஆசை காட்டி வருவதால் இரு கட்சியினரும் தங்கள் கவுன்சிலர்களை ரகசிய இடத்தில் தங்க வைத்து கவனித்து வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 19 வார்டுகளில் அ.தி.மு.க.-9, தே.மு.தி.க.-2, தி.மு.க.-5, காங்.-1, அ.ம.மு.க.-2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைவர் பதவியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க தே.மு.தி.க. கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. துணைத்தலைவர் பதவி உள்பட சில முக்கிய நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

தி.மு.க. கூட்டணி 6 இடங்களை பிடித்துள்ளதால் தே.மு.தி.க.வின் ஆதரவை பெற்று துணைத்தலைவர் பதவியை பிடிக்க அவர்களும் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். இதற்காக தே.மு.தி.க. கவுன்சிலர்களை தனியார் விடுதியில் தங்க வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதேபோல் நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் பதவிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 20 இடங்களில் அ.தி.மு.க.-10, தி.மு.க.-7, சுயேட்சை-2, பா.ம.க.-1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.