நாகர்கோவிலில் கோட்டாறு பகுதியை சார்ந்த15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தலைமறைவான நிலையில், திருநெல்வேலியில் உள்ள காட்டு பங்களாவில் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம். நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போனதாக கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த சிறுமி நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 20 வயது காதலனுடன் திருமணம் செய்ய திட்டமிட்டு தலைமறைவாகியது தெரிய வந்தது.

அவர்களை கோட்டார் போலீசார் மீட்டு, இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் சிறுமியை விசாரணை செய்ய குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது விசாரணையில் கடந்த 2017 ம் ஆண்டு சிறுமியின் தாயார் , முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசனிடம் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக தனது மகளையும் அழைத்து சென்றபோதெல்லாம் சிறுமிக்கு நாஞ்சில் முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதேப்போன்று நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மேலும் சிலர் பாலியல் தொல்லை அளித்து துன்புறுத்தியதாக சிறுமி அளித்த வாக்குமூலம் குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி புகார் அளித்தார்.

இந்தநிலையில் சிறுமியின் தாயார் அமுதா நாகர்கோவில் குளத்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாலு (வயது 66), கோட்டார் கம்பளத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 43) , உறவினர் கார்த்திக் (வயது 23) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதோடு மாணவியிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மாணவியை அவருடைய தாயாரே, முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்ளிட்டோருக்கு விருந்தாக்கியது தெரியவந்தது.

இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள நாஞ்சில் முருகேசனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது மருத்துவர் ஒருவர் உதவியுடன் திருநெல்வேலியில் உள்ள குட்டம் பகுதியில் மருத்துவருக்கு சொந்தமான காட்டு பங்களாவில் பதுங்கியிருந்த நாஞ்சில் முருகேசனை போலீசார் கைது செய்தனர்.

நாஞ்சில் முருகேசனை நாகர்கோவிலுக்கு அழைத்து சென்ற போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.