பாஜக உடனான எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க  முடியாது தமிழக கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசும்போது, “பாஜகவிடமிருந்து நாங்கள் (அதிமுக) தனியாக செல்ல நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். தேர்தலில் நீங்கள்தான் (மக்கள்) எங்களை ஒதுக்கி விட்டீர்களே தவிர நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம்.  உள்ளாட்சித் தேர்தல் நீங்கள் எங்களுக்கு ஓட்டுப் போடவில்லை. தேர்தலில் 5 ஓட்டுக்கள், 3 ஓட்டுக்களில் எத்தனையோ பேர் தோற்றுள்ளார்கள்.” என்று தெரிவித்தார்.
அமைச்சர் பாஸ்கரனின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது.  “பாஸ்கரனின் பேச்சு அவருடைய சொந்தக் கருத்து. அது கட்சியின் கருத்து அல்ல” என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். மேலும் பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், பாஸ்கரனின் பேச்சைக் குறிப்பிட்டு, “ஹலோ, ராஜ்பவனா?” என்று மிரட்டல் தொனியில் கிண்டல் செய்திருந்தார். இந்நிலையில் பாஜக கூட்டணி குறித்து பேசிய பேச்சிலிருந்து அமைச்சர் பாஸ்கரன் பல்டி அடித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “பாஜக உடனான எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க  முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.