ராஜ்ய சபா சீட்டு வழங்காததால், அதிமுக கூட்டணியைவிட்டு தேமுதிக செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர்கள் எங்களுடன் இருக்கவே விரும்புகிறோம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

 
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக தலா 3 இடங்கள் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கே ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் தேமுதிக ஒரு ராஜ்ய சபா சீட்டை கேட்டுவந்த நிலையில், யார் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று தம்பிதுரை, கே.பி. முனுசாமி ஆகியோர் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஆச்சரியமளிக்கும் விஷயமாக தமாக தலைவர் ஜி.கே. வாசனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால், தேமுதிக தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்தது. மேலும் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், “ நாடாளுமன்றத் தேர்தலின்போது பாமக நிறுவனர் ராமதாஸ் எங்களுக்கு ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வேண்டும் என்று கேட்டார். அதன் அடிப்படையில் அப்போதே முறையாக ஒப்பந்தம் போடப்பட்டது. பாமகவை தவிர வேறு கட்சிகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளவில்லை.
கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் ராஜ்ய சபா சீட்டு எதிர்பார்ப்பது இயல்புதான். ஆனால், இதையெல்லாம் அலசி ஆராய்ந்துதான் தலைமை கழகம் முடிவு செய்துள்ளது. தேமுதிக இப்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் உள்ளது. எதிர்காலத்தில் என்ன நடக்கிறது எனப் பார்ப்போம். அவர்கள் எங்களுடனே கூட்டணியில் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஜி.கே. வாசனுக்கு கூட்டணி கட்சி என்ற அடிப்படையிலும் ஓர் இயக்கத்தின் தலைவர் என்ற அடிப்படையிலும் ஓரிடம் வழங்கப்பட்டது. வேறு எந்தக் காரணமும் இல்லை” என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.