தமிழகத்தில் ஒரு சில கட்சிகளுடன் தேர்தலில் இணைந்து போட்டியிடும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, நடிகர் விஜயின் ஆதரவை கோரியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 வரும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்தியக் குடியரசு கட்சி உள்ளிட்ட சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இக்கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். தேர்தலில் கமல்ஹாசன் தென் சென்னை அல்லது ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், “தேர்தல் என்ற பல்லக்கில் நான் ஏறிகொள்வதைவிட, அந்தப் பல்லக்கை தோளில் சுமப்பதைப் பெருமையான நினைக்கிறேன்” என்று பேசி தேர்தலில் போட்டியிடாதது பற்றி கமல்ஹாசன் விளக்கம் அளித்திருந்தார்.
மேலும் கோவையில் வீடியோக்களைக் காட்டி கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போதும் பாஜக-அதிமுக ஆட்சியின்போதும் நடந்த அவலங்களை வீடியோ காட்சிகளாகப் போட்டுகாட்டி, “இதை மக்கள் யாரும் மறந்துவிடக் கூடாது. அவர்களை கேள்வி கேட்க வேண்டும்” என்றும் கமல் முழங்கினார். வேட்பு மனு தாக்கல் முடிந்தவுடன், தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளவும் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தை ரஜினி ஆதரிப்பார் என்று கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்திருந்ததைப் போல நடிகர் விஜயின் ஆதரவை மக்கள் நீதி மய்யம் கோரியதாக தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே, விஜய்க்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வர வேண்டும் என்று கமல் வெளிப்படையாக அழைப்பு விடுத்திருந்தார். அந்த அடிப்படையில் விஜய் ரசிகர்களின் ஆதரவை பெறும் முயற்சியாக மக்கள் நீதி மய்யம் விஜய் தரப்பை அணுகியதாக கூறப்பட்டன.
ஆனால், இந்தத் தகவல்களில் உண்மை இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் அவ்வாறான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.