நடிகர் விஜய் தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் ஏற்றுக் கொள்வோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தனது பெயரில் மக்கள் இயக்கம் தொடங்கி நடத்தி வருகிறார். தனது படவிழாக்களிலும், படங்களிலும் அரசியல் பேசி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துவார். ராகுல் காந்தியையும், சந்திப்பார், அன்ன ஹசாரேவையும் சந்திப்பார். இதனால் அவர் தேசிய கட்சியில் இணைவார் என சில ஆண்டுகளாக வதந்திகள் உலா வருகின்றன. 

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னாள் அவர் மீது வருமான வரிதுறை நடவடிக்கை எடுத்தது. நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த அவரை அங்கிருந்து அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பரவலாக கருத்துகள் எழுந்தன. அவருக்கு ஆதரவாக மத்திய, மாநிலத்தில் ஆளும்கட்சிகள் கூட்டணி கட்சிகளை தவிர எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. விஜயை தங்கள் வீட்டுப்பிள்ளையாக உருவகப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் , திமுக கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக கச்சை கட்டின.

இதனை மையப்படுத்தி,  'நடிகர் ரஜினியை எதிர்ப்பது, விஜய்யை ஆதரிப்பது' என்ற நிலைப்பாட்டை எடுத்த, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, 'இளைஞரின் நம்பிக்கை நாயகனாக இருக்கும் நடிகர் விஜய், வருமான வரித்துறை சோதனைக்கு அஞ்சக் கூடாது' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, 'நடிகர் ரஜினிக்கு சலுகைகளை வழங்கிய வருமான வரித்துறை, விஜய்க்கு ஏன் வழங்க மறுத்தது என்ற நியாயத்தின் அடிப்படையில் தான் காங்கிரஸ் கேள்விகளை எழுப்பியது. நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனமுவந்து ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால், கட்சியில் சேர அவருக்கு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை' எனத் தெரிவித்தார்.