தொடர் குண்டு வெடிப்பு சர்ச்சையை தொடர்ந்து இலங்கையில் மத்திய அமைச்சர்கள் 9 பேர் திடீர் ராஜினாமா செய்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், அங்குள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை அந்நாட்டு அரசிடம் அதிகரித்துள்ளது. இலங்கை அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இஸ்லாமிய அமைச்சர்கள், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

 

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் இருந்த மத்திய அமைச்சர்கள் 9 பேர் திடீர் ராஜினாமா செய்துள்ளனர். இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசு தவறியதாக குற்றச்சாட்டை அவர்கள், முன்வைத்துள்ளனர். இஸ்லாமிய உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் எனறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். 

இதனிடையே இலங்கையில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொழும்பில் உள்ள அலரி மாளிகையில், நடந்த சந்திப்பின்போது, இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்துவது, பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது உள்ளிட்ட சில பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்த ராஜபக்ச, பிரதமருடனான சந்திப்பில் அரசியல் ரீதியான எந்தவித விஷயமும் பேசப்படவில்லை என்று கூறினார்.