மத்திய பிரதேச மாநிலத்தில்  அரசியல்வாதிகளுடன் உல்லாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை போலீசார்  கைது செய்துள்ளனர், அவர்களிடமிருந்து சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வீடியோ ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

 

மத்திய பிரதேச மாநிலத்தில் அரசியல்வாதிகள், மற்றும் அரசு உயர் அதிகாரிகளை குறிவைத்து, மோசடி கும்பல் ஒன்று  நடத்திய சதி திட்டம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்களை ஏமாற்ற அந்தக்கும்பல் கையாண்ட திட்டம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளை சந்திக்கும் இளம் பெண்கள் ஏதாவது உதவி கேட்பது போல் தங்களை அறிமுகம் செய்வார்கள். பின்னர் உதவிக்கு கைமாறாக பாலியலுக்கு இணங்கவும் தயார் என்று சொல்வார்கள். அதற்கு இணங்குபவர்களுடன் அந்தரங்கமாகவும் இருந்து அவர்களுக்கே தெரியாமல் புகைப்படங்கள், வீடியோக்களையும் எடுப்பார்கள். பின்னர் அந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் காட்டி மிரட்டி கோடிக்கணக்கில் பணத்தை பறிப்பார்கள். இதுதான் இந்த கும்பலின் நீண்ட நாள் வாடிக்கையாகவும் இருந்து வருகிறது.

இதேபோன்ற இக்கும்பலிடன்  சிக்கிய பொறியாளர் ஒருவர், இக் கும்பலின் மிரட்டலுக்கு பயப்படாமல் போலீசிடம் புகார் கொடுத்ததனால்  கும்பலின் கைங்கரியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இக் கும்பலைச் சேர்ந்த 5 பெண்களை கைது செய்து விசாரித்து வருவதுடன், அவர்களிடம் இருந்து சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான அந்தரங்க வீடியோக்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்..

இன்னுப் பல முக்கிய பிரமுகர்களின் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல் செய்யப்படாமல் மீதமுள்ளதாக  கூறிய போலீசார்,  அந்த வீடியோக்கள் வெளியில் கசிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது பெரும் சவாலான பணி என கூறியுள்ளனர். இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் பாலியலில்  ஈடுபட்ட அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை செய்யப்படும் என்றும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.