நாளை அதிகபட்சமாக 70 கிலோ மீட்டர் வேகத்தில் வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் புயல் காற்று வீச வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது உருவாகியுள்ள ஃபோனி  புயல் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டு உள்ளதாகவும் இன்று தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது.  அதன்படி சென்னையில் இருந்து 870 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது என  வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார் 

தற்போதைக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயல் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களில் சென்னை உள்ளிட்ட வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதியில் 300 கிலோ மீட்டர் தூரம் வரை வந்து செல்ல வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாம். மேலும் மழையை விட வட தமிழக பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை புயல் காற்று வீசக்கூடும் என்றும் அதிகபட்சமாக 70 கிலோ மீட்டர் வரையில் புயல் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் பகுதியில் மே ஒன்றாம் தேதி கொந்தளிப்பு காணப்படும் என்றும் ஏப்ரல் 29, 30 மே 1 மே 2 ஆகிய தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போன்று தற்போது மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோனி புயல் தமிழகத்திற்கு நல்ல மழையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திசை மாறியதால் எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லாமல் லேசான மழை மட்டுமே பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.