உலகிலேயே மிக அழகிய கையெழுத்து கொண்ட விரல்களே இல்லாத சிறுமி..! 

அழகிய கையெழுத்து போட்டியில் விரல்களே இல்லாத சிறுமி கலந்துகொண்டு முதல் பரிசை பெற்றுள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

சீனாவை பூர்வீகமாகக் கொண்ட சிறுமி சாரா ஹின்ஸ்லே கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவில் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் பிறக்கும் போதே தன் கை மணிக்கட்டுக்கு அடுத்து உள்ள விரல்கள் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது மூன்றாம் வகுப்பு பயிலும் இந்த சிறுமி நம்பிக்கையுடன் மேற்கொண்ட பல்வேறு முயற்சியின் காரணமாக விரல்கள் இல்லாமலேயே திறம்பட எழுதவும் வரையவும் கற்றுக்கொண்டார். இரு கைகளாலும் சேர்த்து பேனாவை பிடித்துக்கொண்டு எழுதும் திறன் பெற்றவர் இவர்.

தற்போது தேசிய அளவில் அழகிய கையெழுத்து கொண்ட நபரை தேர்ந்தெடுக்க அமெரிக்காவில் நடத்தப்பட்ட போட்டியில் சிறுமி கலந்து கொண்டு முதல் பரிசை வென்றுள்ளார். உலகம் முழுவதிலுமிருந்து இவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.