ஃபானி புயல் ஏமாற்றினாலும்... கை கொடுக்கும் வெப்பச்சலனம்...! 

ஃ பானி புயலால்தமிழகத்துக்கு மழையில்லாமல் ஏமாற்றம் கண்டாலும் வெப்ப சலனம் சற்று கைகொடுக்க தொடங்கியுள்ளது. அதாவது வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃ பானி புயலால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்கும் என்றும் குறிப்பாக சென்னை, புதுவை, கடலூர் உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென திசை திரும்பி ஒடிசா கடற்கரையை நோக்கி சென்றது புயல். நாளை ஒடிசா கடற் கரையை கடக்கும் புயலால் பெருத்த சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், ஒடிசா அரசு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. 

இதனை தொடர்ந்து  தாழ்வான பகுதியில் இருந்த லட்சக்கணக்கான மக்களை பாதுகாப்பான வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்து உள்ளனர். இந்நிலையில் தமிழகத்திற்கு மழை இல்லையா? என ஏங்கி உள்ள விவசாய பெருமக்களும், பொதுமக்களும் மனது நிம்மதி அடையும் வகையில், வெப்ப சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை தெரிவித்துள்ளது.

அதன்படி தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாம். மேலும் பானி புயல் மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால் மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.