கோடை விடுமுறை என்பதால் நெல்லை மாவட்ட குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் குற்றாலத்தை சுற்றியுள்ள பல பகுதிகளில் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியது.

சமீபத்தில் சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்து வந்ததால் அருவியில் வறண்ட நிலை காணப்பட்டது. அதேவேளையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் திற்பரப்பு அருவியில் அதிக நீர் வெளியேறுகிறது. அருவியில் கொட்டும் நீரில் குளிக்க மக்கள் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர். 

மேலும் அதனை சுற்றி உள்ள சிறுவர் பூங்கா படகு சவாரி உள்ளிட்ட பல இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள இதுபோன்ற அருவிகளில் வந்து விளையாடுவதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பப்படுகின்றனர்.