இனி ஹால்மார்க் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும !! மத்திய அமைச்சர் அதிரடி உத்தரவு ....
2021 ஜனவரி முதல் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என நகைக்காரர்களுக்கு பஸ்வான் அறிவுறுத்தியுள்ளார்.
நம் வீடுகளில் நடைபெறும் காது குத்து முதல் கல்யாணம் வரை எந்தவொரு விசேஷத்திலும் தங்கம் இடம்பெறாமல் இருப்பதில்லை. விசேஷத்தை பொறுத்து தங்கத்தின் அளவு கூடும் அல்லது குறையும்.
மேலும், தங்கம் நல்ல முதலீடாக பார்க்கப்படுவதால் நம் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கின்றனனர். அதேசமயம் நாம் வாங்கும் தங்கம் சுத்தமானதா என்பது பலருக்கும் தெரிவதில்லை.
கடைக்காரர் மீதுள்ள நம்பிக்கையில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கத்தை வாங்கி வருகின்றனர். அதேசமயம் தங்கத்தின் தரம் குறித்து இந்திய தரநிர்ணய கழகம் (பி.ஐ.எஸ்.) பரிசோதனை செய்து சுத்தமான தங்கம் என்பதற்காக ஹால்மார்க் முத்திரை சான்றிதழ் வழங்குகிறது.
கடந்த 2000 ஏப்ரல் முதல் நம் நாட்டில் ஹால்மார்க் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நம் நாட்டில் விற்பனையாகும் 40 சதவீத தங்க ஆபரணங்கள் ஹால்மார்க் கொண்டவை. தற்போது வரை ஹால்மார்க் தங்க நகைகள்தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் நகைக்கடைக்காரர்களுக்கு இல்லை.
இந்த நிலையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், அடுத்த ஆண்டு முதல் தங்க நகைக்கடைக்காரர்கள் ஹால்மார்க் முத்திரையிட்ட தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பஸ்வான் கூறுகையில், 2021 ஜனவரி 15 முதல் தங்க ஆபரண நிறுவனங்கள் 14,18,22 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட நகைகள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
பி.ஐ.எஸ்.-ல் பதிவு செய்து கொள்ள மற்றும் இதனை செயல்படுத்த அவர்களுக்கு ஒரு ஆண்டு கால அவகாசம் வழங்கப்படுகிறது. நகைக்கடைக்காரர்கள் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க ஆபரணங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பதற்கான அறிவிக்கையை நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிடும் என தெரிவித்தார். ஆக, அடுத்த வருஷத்திலிருந்து நாம எந்த சந்தேகமும் இல்லாமல் சுத்தமான தங்கத்தை கடைகளில் வாங்கலாம்.