வரும் 29ஆம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகி  தமிழகம் அருகேதான் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் கன மழையும் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இது குறித்து வெதர்மேன் தெரிவிக்கும் போது, "புயல் துல்லியமாக தமிழகம் அருகே தான் கரையை கடக்கும் என்பதை கணிக்க இன்னும் ஒரு நாள் தேவை. ஆனால் 60 % வாய்ப்பு தமிழகத்திற்கே உண்டு. இருந்தபோதிலும் இயற்கை மாற்றம் எப்படி வேண்டுமென்றாலும் திசை திரும்ப வாய்ப்பு உள்ளது. 

ஏற்கனவே கணித்த மாதிரி, தமிழகத்தில் கரையை கடக்கும் போது, நல்ல கனமழை பெய்யும். குறிப்பாக சென்னைக்கு அருகாமையில் புயல் கரையை கடந்தால், சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்சனை தீர்ந்து விடும்.அதே வேளையில், உருவாக உள்ள புதிய புயல் சக்தி வாய்ந்தது என்பதால், வேகமாக வீசும் காற்று மற்றும் கனமழை காரணமாக சில பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்து உள்ளார் வெதர்மேன்.

சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு நடுவே, புதிய புயல் சின்னம் உருவாக உள்ளதால் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருகின்றனர்.