நமக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத நல்ல பாத்திரங்கள் எவையென தெரிந்து கொள்ளுங்கள்?
மாடுலர் கிச்சன் வந்து விட்டதால் சமையல் அறை தற்போது புதுப்பொலிவை பெற்றுள்ளது. உண்மையை சொல்வதென்றால், அழுகுக்கு வைக்கப்படும் பல பொருட்கள் ஆரோக்கியத்தை அளிப்பதில் பின்தங்கி தான் உள்ளன. பல வகையான பாத்திரங்கள் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டாலும் இருந்தாலும் அவை பாதுகாப்பானதா? ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்குமா? அல்லது தீங்கு விளைவிக்குமா? என்ற கேள்வி எழுகிறது. அந்த வகையில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் சில பாத்திரங்களை காண்போம்
செம்பு
தாமிரத்தினால் செய்யப்பட்ட செம்பு பாத்திரங்கள் ஹீமோகுளோபினை அதிகரித்து, உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் ஆற்றலை படைத்தவை. செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. புளிப்புத் தன்மை கொண்ட உணவுகளை மட்டும் செம்பு பாத்திரத்தில் சேமித்து வைக்கக்கூடாது.
எஃகு
எஃகு பாத்திரத்தில் சேமிக்கப்படும் உணவுகள், எந்த எதிர்வினையும் ஆற்றாமல், அதிக வெப்பநிலையைத் தாங்கக் கூடியவை. ஏனெனில் எஃகு எதிர்வினையற்ற பண்புகளைக் கொண்டுள்ளதால் உணவுகளை சேமித்து வைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அலுமினியம்
அலுமினியம், பொருட்களை விரைவாக சூடாக்கும் போதிலும், அலுமினியத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள் தக்காளி மற்றும் வினிகர் போன்ற அமிலத் தன்மை கொண்ட உணவுகளுடன் வினைபுரிந்து உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக கையாள வேண்டும்.
கண்ணாடி
கண்ணாடியால் செய்யப்பட்ட பாத்திரங்களில் இரசாயனங்கள் கலந்திருக்காது. வாசனையோ, சுவையோ இருக்காது. எனவே கண்ணாடி பாத்திரங்களில் உணவு பொருட்களை சேமித்து வைப்பது பாதுகாப்பானது.
இருதயத்தைப் பாதுகாக்கும் வால்நட்ஸ்: ஆய்வில் வெளிவந்த சூப்பர் தகவல்!
வெள்ளி
வெள்ளி பாத்திரங்களில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இதைப் பயன்படுத்துவது பித்த குறைபாடுகளை நீக்கும். வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.
பித்தளை
பித்தளை பாத்திரங்களில் ஈயம் பூசப்பட்டால் மட்டுமே அவை பயன்படுத்த ஏற்றவையாக இருக்கும். இந்த உலோகத்தை வெப்பப்படுத்தும் போது உப்பு மற்றும் அமில தன்மை கொண்ட பொருட்களுடன் வினைபுரியும். ஆகவே பித்தளைப் பாத்திரங்களில் சமையல் சமைப்பதை தவிர்ப்பது நல்லதாகும். வேண்டுமெனில், பித்தளை பாத்திரங்களை உணவு பரிமாறுவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து கல்லீரல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
இரும்பு
இரும்பில் தயாரிக்கப்படும் தோசைக்கல் மற்றும் தவா ஆகியவற்றை பயன்படுத்துவது உடலில் ஹீமோகுளோபின் அளவை உயர்த்தும். இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சிக்கும் இவை உதவும். செம்பு பாத்திரத்தை போலவே இதிலும் புளிப்பு தன்மை கொண்ட உணவுகளை வைக்கக்கூடாது. அவை எதிர் வினையாற்றலாம். காய்கறிகளின் நிறத்தையும் கருமையாக்கி விடும்.