கொரோனா 2வது அலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
கொரோனா 2வது அலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. குறிப்பாக இந்தியாவிலும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. இதையடுத்து, கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு தற்போது மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வந்ததையடுத்து, ஊரடங்குகள் தளர்த்தப்பட்டது. இதனால் மக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதை மறந்து வழக்கம்போல் இருந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒருமாதமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இதனால், சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில்;- கொரோனா 2வது அலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. 2020 மார்ச்சில் முதல் அலை தாக்கிய நிலையில் 2021 மார்ச்சில் 2வது அலையை நோக்கி இந்தியா செல்கிறது. கொரோனா 2வது அலை உருவாவதற்கு நாம்தான் காரணம். தினமும் 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினால்தான் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். இந்தியாவில் கொரோனா இல்லை என நினைத்து விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என ரன்தீப் குலேரியா கவலை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் கொரோனா 2வது அலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளதால் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
