காதல் மற்றும் இல்லற உறவில் சண்டைகள் எழுவது இயற்கை. அது தற்காலிகமாக இருக்கவேண்டுமே தவிர நிரந்தர விரிசலாகக் கூடாது. இன்றைய தலைமுறை கூறுவது போல திருமணம் ஓல்டு ஃபேஷனோ, அவுட் ஆஃப் டேட்டோவோ இல்லை. காதலின்றி அமையாது உலகு.

குறுக்கீடு என்பது தவறானது ஒருவர் பேசுவதை முழுமையாக கேட்காமல் குறுக்கிட்டு பேசும் போதுதான் சண்டையே பிறக்கிறது. சோர்வு காரணமாக மனைவி எதையோ கூற, அவர் தன்மீது வெறுப்பைக் கொட்டுவதாக கருதிக்கொண்டு கணவன் வேறு எதையோ பேச இனிமையான தொடங்க வேண்டிய தருணங்கள் கொடுமையாக மாறும். எனவே எதிர்மறை எண்ணங்களை தொடக்கத்திலேயே தவிர்த்துவிட வேண்டும். 

துணை சோர்வாக இருக்கிறார் என்று அறிந்தால்... அவரை கேள்விக்கேட்டு நச்சரிக்காமல் அவருக்கு பிடித்ததை செய்யலாம். அவரை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்றால் சோர்வுக்கான காரணங்களை கூறிவிடுவார். அப்போது ஆறுதலாகப் பேசி சரி செய்யலாம். எதிர்மறை வட்டத்தில் இருந்து வெளியேறிய பின் துணையின் உணர்ச்சிகளை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். 

   ஃபார்முலா தெரியாமல் கணக்கில் விடை அறிய முடியாது என்பது போல துணையின் உணர்ச்சிகளை புரிந்துக் கொள்ளாமல் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்த முடியாது. சிரித்த முகமாவே இருந்தாலும் அவர்  மனம் வருத்தத்தில் இருந்தால் அதனை உணர்ந்துகொண்டு அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

யார் தன்னை தானே சரியாக புரிந்துக் கொள்ள முடியவில்லையோ, அவரால் பிறரை முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாது. எனவே, தனது தேவை விருப்பம் அத்தியாவசியங்களை அறிந்துவைத்திருக்க வேண்டும். தனது தேவை, துணையின் தேவை இரண்டும் சேர்ந்து நமது தேவை என்ன என யோசிக்கத் தொடங்கும்போது - அதனை இருவரும் சேர்ந்து யோசிக்கும் போது உணர்வு ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்தும்

 ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும். உதவி என்று கேட்கும் முன்னரே, அவரது தேவை என்ன என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். பலரும் செய்யும் தவறு துணையை நன்கு புரிந்து வைத்திருந்தாலும் அவர்கள் அறியும் வகையில் காதலை வெளிப்படுத்த மாட்டார்கள். காதலை வயது, நிலைமை, சூழல், கவலை என எதையும் பாராமல் வெளிப்படுத்தும்போது மட்டுமே உறவு இளமையாக இருக்கும்.