வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து புயலாக மாறி வட தமிழக கடற்கரையை நோக்கி வர உள்ளது.

இதன் காரணமாக ஏப்ரல் 30 மே 1, 2 ஆகிய தேதிகளில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறி தென்மேற்கு வங்க கடல் மற்றும் இந்திய கடலில் மையம் கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.

இது மெதுவாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வட தமிழக கடற்கரை அருகே மையம் கொள்ள வாய்ப்பு உள்ளது. பிறகு தமிழக கடலோரத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக மே1 மிகவும் கனமழை பெய்யும் என்றும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழகம் மற்றும் புதுவையில் குறிப்பாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் 120 மில்லி மீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.