23 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து.

நேற்று நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்து தங்கம் தட்டி சென்றார். இதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த பெருமையை பெற்றுள்ளார் கோமதி மாரிமுத்து.

திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான இவர், சிறுவயது முதலே ஓட்டப்பந்தயத்தில் தான் கொண்ட ஆர்வம் மூலம் அனைத்து போட்டிகளிலும் கலந்துகொண்டு முதல் பரிசை பெற்று வந்துள்ளார். அதனுடைய விளைவே இன்று ஆசிய தடகள போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தற்போது இவர் பெங்களூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கேட்டபோது, "எங்கள் மகள் போட்டியில் வென்றதே தெரியாது. எனக்கு டிவி போட தெரியாது. நான் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, என் உறவினரின் குழந்தை ஒருவர் ஓடி வந்து என்னிடம் கோமதி அக்கா டிவியில் வராங்க அவங்க போட்டியில் ஜெயிச்சுட்டாங்க அப்படின்னு சொன்னாங்க.. அப்பதான் எனக்கு தெரியும் அவர் வெற்றி பெற்றுள்ளார் என..." வெகுளியாய் பேசுகிறார் கோமதி மாரிமுத்துவின் அம்மா ராசாத்தி.