வீடுகளில் இருக்கும்போது பெற்றோர் குடும்பத்தில் கவனம் செலுத்தாமல்  ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்த ஆர்வம் செலுத்துவது குழந்தைகளை உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பழக்க வழக்க ரீதியாகவும் கடுமையாக பாதிக்கும் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

5 மற்றும் அதற்கு குறைந்த வயதுள்ள குழந்தைகளைக் கொண்ட 337 பெற்றோரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் முகத்துக்கு முகம் பார்த்துப் பேசும் பழக்கம் குறைகிறது. பெற்றோர்களுக்கு தங்கள் மீதான கவனமும் அன்பும் சிதறி வேறுபக்கம் திரும்புவதாக குழந்தைகள் உணரும்போது அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவதகக் கூறப்படுகிறது. 

அவர்கள் வயதுக்கு மீறிய செயல்கள், புலம்புதல், ஒழுங்குமுறைக்கு வர மறுத்தல், திடீரெனப் பொங்கி வெடித்தல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாவதாகவும் தெரியவந்துள்ளது.

பெற்றோர் சொல்வதை கவனிக்க மெத்தனம் காட்டுவது, எதிர்ப்பான போக்கைக் கடைபிடிப்பது போன்றவையும் தொடர்கின்றன. 

குழந்தைகளால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட பெற்றோர் ஸ்மார்ட் ஃபோனிலேயே மூழ்கிவிட்டால் இருந்த கொஞ்சநஞ்சம் உறவுத் தொடர்பும் அறுந்து நிலைமை மோசமாகும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

பெற்றோர் ஸ்மார்ட் ஃபோன் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து வெளியே வந்து குழந்தைகளுக்கு உணர்வு ரீதியான ஆதரவு அளிப்பது, அவர்களது செயல்களுக்கு பாராட்டு, விமர்சனங்கள் என அவர்களுடனான பேச்சுத்தொடர்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்போது அவர்களை படிப்படியாக ஆக்கபூர்வமான உணர்வு, சமூக பழக்க வழக்க நிலைக்கு கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.