வறண்டு போன ஏரிகள்..! 3 நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர்..! 

சுட்டெரிக்கும் கோடை வெயில் தாங்க முடியாமல் அவதிப்படும் நிலை ஒரு பக்கம் இருக்க.. இன்னொரு பக்கம் குடிநீர் இல்லாமல் அவதிப்படும் பெரும் அவல நிலைக்கு சென்னை மக்கள் உள்ளாகியுள்ளனர்.

கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பல ஏரி குளங்கள் என அனைத்து இடங்களிலும் நீர்வற்றி உள்ளது. வெப்பச்சலனம் காரணமாகவும் பாதிப்புகள் காரணமாகவும் தமிழகத்திற்கு ஓரளவிற்கு மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபானி புயல் திசை திரும்பி ஒடிசாவில் கரையை கடந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகத்தை செய்து வருகிறது சென்னை குடிநீர் வாரியம்.

அதுமட்டுமல்லாமல் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. முன்னதாக புழல் ஏரி, பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல ஏரிகள் முற்றிலும் வறண்டதால் குடிநீர் பஞ்சம் நிலவுவதாகவும் தெரிவித்து உள்ளது.

அதுமட்டுமல்லாமல் லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கினாலும்கூட உடனடியாக தண்ணீர் கிடைப்பதில்லை என மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். மொத்தத்தில் கோடை வெயிலில் இருந்து சமாளிப்பது எப்படி என ஒரு பக்கம் இருக்க.. இன்னொரு பக்கம் குடிநீர் பஞ்சம் சென்னையில் தலைவிரித்து ஆடுகிறது.