கணவன் மனைவியிடையே இரண்டு வகையான துரோகங்கள் நிகழ்வதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். துரோகம் என்பதற்கான அவசியம் ஏற்பட்டு விட்டால் அதற்கான காரணங்களை வகைப்படுத்துவது கடினம் என்கின்றனர். 

ஒவ்வொரு உறவின் உறுதித்தன்மையும் அதன் பந்தம் அல்லது பிணைப்புத் தன்மை, சூழ்நிலை, புரிதலின் அளவு ஆகியவற்றைச் சார்ந்து அமைகிறது. ஆனால் அண்மைக்காலத்தில் துரோகங்கள் பாலினம் சார்ந்து இரண்டு வகையாக அமைவதாக பாலியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

முதல் வகையில் வாழ்க்கைத்துணையுடனான உறவை முறித்துக்கொள்ளும் வகையில் தவறான உறவை ஏற்படுத்திக்கொள்வது.  இந்த வகை துரோகம் பெண்கள் மத்தியில் பரவலாக இருப்பதாகவும், மன விரிசலை ஏற்படுத்திய காரணங்களை அவர்கள் விளக்க விரும்புவதில்லை என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர், 

இந்த வகை துரோகத்தில் தாங்கள் பிடிபடும்போது வாழ்க்கைத் துணையுடனான உறவு முறிந்துவிடும் என்று தெரிந்தே பெண்கள் செயல் படுவதால் அவர்கள் தங்களின் அடுத்த கட்ட பாதுகாப்பான வாழ்க்கைக்கு தயார்படுத்திக்கொள்வதாகவும், அதன் பிறகு ஒருவருக்கொருவர் மன்னிப்பு என்பதற்கோ இணக்கத்துக்கோ வழியே இருக்காது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்றொரு வகை துரோகம் வாழ்க்கைத் துணையிடம் எதிர்பார்த்தது கிடைக்காத போது நிகழ்வது. இது ஆண்கள் மத்தியில் பரவலாக இருப்பதாகக் கூறுகின்றனர் வல்லுநர்கள். தங்கள் உறவில் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கிடைக்காததை ஆண்கள் வெளியில் தேடத் தொடங்கும் வெளிப்பாடாக இந்த வகை துரோகம் அமைகிறது.

ஆனால் இந்த வகையில் அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவை முறித்துக் கொள்வதை அவசியமாகக் கருதுவதில்லை.

வெளியில் இருந்து ஒருவர் தன்மீது சிறப்புக் கவனம் காட்டுவதாக உணர்ந்தால் ஆண்கள் மனைவிக்கு துரோகம் செய்யத் தயாராகி விடுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.  மேலும் வெளிநபரின் அன்பு கிடைக்கும்போது ஆண்கள் அதிக மேலாதிக்கத் தன்மையையும், மனதளவில் இளமைத் தன்மையையும் பெறுவதாகவும் கூறுகின்றனர். குழந்தைகள் பிறந்தவுடன் பெண்களின் முழு கவனமும் குழந்தைகளிடம் திரும்புவதாகவும் அப்போது ஆண்களின்  மனம் வெளியில் அலைபாய்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்