பலாத்கார சம்பவங்களில் பெண்களை எப்போதும் அப்பாவிகளாக நம்பிவிட முடியாது. அவர்கள் பக்கமே எல்லா நேரமும் நியாயம் இருக்க வாய்ப்பில்லை,’’ என்று மகிளா நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள மகிளா (மகளிர்) நீதிமன்றத்தில் பெண் ஒருவர் 2013ம் ஆண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர் முறைகேடாக நடக்க முயன்றதால் வேலையை விட்டு வெளியேறியதாகவும், நிலுவையில் உள்ள ஊதிய தொகையை பெற்று தரும்படியும் அந்த பெண் கோரியிருந்தார். 

ஆனால், இதன் மீதான விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், குறிப்பிட்ட நிறுவனத்தின் உரிமையாளர் தனது மனைவியே என்றும், பண மோசடி செய்வதற்காக, தன் மீது போலி குற்றச்சாட்டு கூறப்படுகிறது என்றும் கூறியிருந்தார். இதுபற்றிய விரிவான விசாரணையில், மேற்கண்ட பெண் தொடர்ந்த வழக்கு போலியான குற்றச்சாட்டில் உள்ளதாக, தெரியவந்தது. 

இதன்பேரில், மகிளா நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், பொய்யான குற்றச்சாட்டுகளில் பெண்கள் பாலியல் புகார் கூறுவதை ஏற்க முடியாது. இதனை முறையாக விசாரிக்காமல் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்வதும் தவறான செயல். பாலியல் வழக்குகள் என்றாலே எப்போதுமே பெண்கள் அப்பாவிகள் என்று யாரும் கருதிவிட முடியாது. மேலும், ஒருதலைபட்சமாக பாலியல் வழக்குகளை கையாளவும் கூடாது. குற்றம் சாட்டும் நபர் சொல்வதையும், குற்றம் சாட்டப்படுபவர் சொல்வதையும் நாம் முறையாக கவனிக்க வேண்டும். 
   
குற்றம் சாட்டப்பட்டவர் மீதுள்ள உண்மைத்தன்மையை நாம் புரிந்துகொள்வது அவசியம். சில நேரங்களில் போலியான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுவதும் வழக்கமாகியுள்ளது. சுய லாபத்திற்காக சில பெண்கள் இவ்வாறு செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது, என தெரிவித்துள்ளது. இந்த போலியான பாலியல் வழக்கை தொடர்ந்த பெண் மீது செக்‌ஷன் 177,182,193,211 உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட போலீசாருக்கு, மகிளா நீதிமன்றம் அறிவுறுத்தியும் உள்ளது.