உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில், மற்ற நீதிபதிகள் தங்களுக்கு ஆண் ஊழியர்களை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். இந்தக் குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ரஞ்சன் கோகாய் கடும் மறுப்பு தெரிவித்ததுடன், நீதித்துறை அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.  இதற்கிடையே இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூற 1.5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் விசாரித்தும் வருகிறார்கள்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களை மாற்றிவிட்டு ஆண் ஊழியர்களை நியக்க வேண்டும் என நீதிபதிகள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். நீதிபதிகள் தன்னைச் சந்தித்தபோது இதைக் கோரியதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். சில நேரம்  வழக்கு தொடர்பான வேலைகளை முடிக்க நீண்ட நேரம் ஆகும் என்பதால், பெண் ஊழியர்கள் இருப்பதை நீதிபதிகள் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. 
ஆனால், உச்ச நீதிமன்ற ஊழியர்களில் 60 சதவீதம் பேர் பெண் ஊழியர்களாக இருப்பதால், நீதிபதிகளில் கோரிக்கைகளை ஏற்பதில் சிக்கல் உள்ளதாகவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.