ஒருதலை காதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக பெண்கள் மீது தான் ஆண்கள் ஆசிட் வீசுவதை வழக்காக கொண்டிருந்தனர். ஆனால், தற்போது அந்த நிலைமை மாறி திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது பெண் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

டெல்லி, விகாஸ்புரியை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், 24 வயது இளைஞர் ஒருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞரிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.  ஆனால், சில சாக்குபோக்குகளை சொல்லி காலம் கடத்தி வந்துள்ளார் அந்த இளைஞர்.

 

இந்நிலையில், பெண்ணின் தொல்லை தாங்காமல் அவருடனான காதலை முறித்து கொள்ள அந்த காதலன் திட்டமிட்டுள்ளார். இதை தெரிந்து கொண்ட காதலி  வழக்கம் போல் காதலனுடன்  இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி சென்றுள்ளார். அப்போது,  திடீரென மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து தனது காதலனின்  முகத்தில் ஊற்றியுள்ளார். பிறகு போலீசாருக்கு பயந்து தனது உடலிலும் ஆசிட்டை ஊற்றிக்கொண்டார். இதையடுத்து அவர்களை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணான பதிலை அளித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் காதலியிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில்  ஆசிட் வீதியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, ஆசிட் வீசிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.