பான் கார்டு இல்லாமல் ஒரு கிராம் தங்க நகைகள் முதல் கிலோ கணக்கில் தங்க நகைகள் கூட வாங்க முடியாது என்ற கடுமையான நடைமுறையை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

நிதி ஒழுங்குமுறை குழு அளித்த பரிந்துரையில், தங்க நகைகள் தொடர்பான அனைத்து பரிமாற்றத்துக்கும் பான் கார்டு எண் அளிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தற்போது ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்க நகைகள் வாங்கினால்தான் பான் எண் வழங்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதை மாற்றி, தங்க நகைகள் வாங்கினாலே பான்கார்டு அளிக்க வேண்டும் என்று கடுமையான விதிகள் அமலாக உள்ளன.

மத்திய அரசின் நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுவின் துணை குழு உருவாக்கப்பட்டு, அந்த குழு நாட்டில் உள்ள வீடுகளின் நிதிச்சூழல் குறித்து ஆய்வு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்த குழுவில் லண்டன், இம்பீரியல் கல்லூரியின் பொருளாதாரத்துறை பேராசிரியர் தருண்ராமதுரை, ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு வாரியமான ‘செபி’, இந்திய காப்பீடு ஒழுங்கு முறை மற்றம் மேம்பாட்டு ஆணையமான ‘ஐ.ஆர்.டி.ஏ.ஐ.’, ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையமன ‘பி.எப்.ஆர்.டி.ஏ.’ ஆகியவற்றில் இருந்து பிரதிநிதிகள் இடம் பெற்று இருந்தனர்.

இந்த குழுவின் முக்கிய பரிந்துரையாக, “ வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்கவே பெரும்பாலும் தங்க நகைகள் வாங்கப்படுகிறது. அதைத் தடுக்க கடுமையான விதிகள் கொண்டு வரப்பட வேண்டும். ஒரு முக்கியமானது, தங்க நகைகள் வாங்கும் போது, பான் கார்டு எண்ணை தெரிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளது.

மேலும், உலகில் உள்ள எந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் உள்ள வீடுகளில் தான் அதிகமான தங்க நகைகள் இருப்பு உள்ளது.  இந்தியாவில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் தங்கநகைகளை முறைப்படி முதலீடு செய்தால் அதிகமான வட்டி வீதங்களைப் பெறலாம்.

வீடுகளில் தங்க நகைகள் வாங்கிச் சேர்க்க பல காரணங்கள் உள்ளன. அதில் வருமான வரி செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில் தங்க நகைகளை மக்கள் வாங்குகிறார்கள், சட்டவிரோத வருமானத்தை மறைக்க நகைகள் வாங்குகிறார்கள் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.