பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு தண்டனை விவரங்களை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது.

ரோடாக் நகரில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள குர்மீத் சிங்குக்கு தீர்ப்பை நீதிபதி ஜக்தீப் சிங் சிறையில் சென்று அறிவிக்க உள்ளார். இதற்காகபஞ்ச்குலா நகரில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் நீதிபதி சிறைக்கு செல்கிறார்.

பலாத்கார வழக்கு

கடந்த 2002ம் ஆண்டு தனது  பெண் சீடர்கள் இருவரை பலாத்காரம் செய்ததாக தேராசச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு 15 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில்,குர்மீத் சிங் குற்றவாளி என நேற்று முன்தினம் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

32  பேர்பலி

இதையடுத்து, சாமியார் குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் அரியானாவின் பஞ்ச்குலாநகரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும், பஞ்சாபிலும் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். பஸ்கள், வாகனங்கள், ஊடகத்தின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீவைக்கப்பட்டன. இதில் 32 பேர் கொல்லப்பட்டனர், 350-க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர்.

926 பேர் கைது

இதையடுத்து, ராணுவத்தினர், துணை ராணுவப்படையினர், போலீசார் இணைந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கலவரம் தொடர்பாக தேரா சச்சா சவுதா அமைப்பினர் 926 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர், 52 வழக்குகளை போலீசார் பதிவு செய்யப்பட்டதாக, அரியானா போலீஸ் டி.ஜி.பி. பி.எஸ். சாந்து தெரிவித்தார். 

ஊரடங்கு உத்தரவு

கடந்த இரு நாட்களாக பஞ்சாப், அரியா நகரில் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் , போலீசாருடன் இணைந்து தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை இன்னும் தளர்த்தாமல் வைக்கப்பட்டுள்ளது.

சிறையில் தீர்ப்பு

இந்நிலையில், குர்மீத் சிங் மீதான வழக்கில் தீர்ப்பு இன்று சிறையிலேயே கூறப்படுகிறது. இதற்காக சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஜக்தீப் சிங் தனி ஹெலிகாப்டர்மூலம் சிறைக்குச் சென்று தீர்ப்பை அறிவிக்கிறார்.

தீவிர பாதுகாப்பு

தீர்ப்புக்கு பின் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, பல அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசாரும், ராணுவத்தினரும் மேற்கொண்டுள்ளனர். ரோடக்மாவட்டம், சுனாரியா நகரில் அமைந்துள்ள சிறையைச் சுற்றி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விடுமுறை

பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ரோடக் மண்டல போலீஸ் ஐ.ஜி. நவ்தீப் விர்க் கூறுகையில், “ குர்மீத் சிங் மீதான தீர்ப்பையொட்டி ரோடக் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் 4 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. ஆயுதங்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், உள்ளிட்ட அனைத்துக்கும்விடுமுறை விடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

இன்டர்நெட் சேவை ரத்து

இதற்கிடையே சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் ஏதும் பரவக்கூடாது என்பதற்காக மொபைல் இன்டர்நெட் சேவை காலை 11.30 மணி வரை அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  மேலும், சிர்சா நகரில் உள்ள தேரா சச்சா சவுதா அலுவலகத்திலும் இன்டர்நெட் இணைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.