மீண்டும் போர் விமானங்களை இயக்க முடியுமா? என்கிற சோதனைக்கு பெங்களூவில் உட்படுத்தப்பட இருக்கிறார் அபிநந்தன்.

பாகிஸ்தானில் இருந்து விடுதலையான இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அபிநந்தன் உடலில் பாகிஸ்தான் ராணுவம் உளவு பார்க்கும் கருவியை பொருத்தியிருக்கிறதா என்ற பரிசோதனையும் அவரை உடல்ரீதியாக துன்புறுத்தி ராணுவ ரகசியங்கள் பெறப்பட்டனவா என்பது குறித்தும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

அத்துடன் அடுத்த கட்டமாக போர் விமானத்தை இயக்கும் அளவுக்கு உடல்நிலை, மனநிலையில் அபிநந்தன் இருக்கிறாரா என்கிற சோதனைகளுக்கும் அவர் உட்படுத்தப்பட இருக்கிறார். இதுகுறித்த சோதனைகள் பெங்களூருவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோ ஸ்பேஸ் மெடிசன் அமைப்பில் நடத்தப்பட உள்ளது. ஏற்கெனவே இந்த அமைப்பு மூலம் சான்றிதழ் பெற்றுள்ள அபிநந்தன் மீண்டும் போர் விமானங்களை இயக்க இந்த அமைப்பிடம் சான்றிதழ் பெற வேண்டும். 

விபத்தில் அபிநந்தனின் உடல் தகுதி பாதிக்கப்பட்டிருக்கும் என்பதால் அவர் மீண்டும் சான்று பெற வேண்டியது அவசியம். போர் விமானங்களை இயக்க ஏ1ஜி1 சான்றிதழ் பெற்றால் மட்டுமே விமானத்தை இயக்க அனுமதிக்கப்படுவார்.  தற்போதைய நிலையில் அபிநந்தன் அந்த சான்றிதழை பெற சோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார். இதில் அவர் தேறினால் மட்டுமே போர் விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுவார்.