வடகிழக்கு டெல்லி கலவரத்தில் போலீசாரை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டிய ஷாரூக் என்ற இளைஞரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில், ஒரு தலைமைக்காவலர் உள்பட 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அங்கு பதற்றம் நிலவி வந்தது. 

இந்த போராட்டத்தில் இளைஞர் ஒருவர் வானத்தை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டார். மேலும், காவல் துறையினரையும், சிவப்பு நிற டி ஷர்ட் அணிந்த அந்த நபர் மிரட்டினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, கைத்துப்பாக்கியுடன் வலம் வந்த அந்த நபர் யார் என போலீசார் தீவிரமாக விசாரித்து தேடி வந்தனர். போலீசாரையே துப்பாக்கியை காட்டி மிரட்டும் அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போனதற்கு உளவுத்துறையின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். 

இதையடுத்து போலீசாரின் விசாரணையில் அவருடைய குடும்பத்திற்கு குற்றப்பின்னணி இருப்பதும் தெரியவந்தது. ஷாருக்கின் தந்தை போதை மருந்து வியாபாரம் தொடர்பான ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் என்றும், ஷாருக்கின் உறவினர் ஒரு வன்முறை கும்பலுக்கு தலைவர்  என்றும் போலீசாருக்கு தெரியவந்தது. ஆனாலும் ஷாருக்கை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வந்தனர். 

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி நகரில் பதுங்கியிருந்த ஷாரூக் என்ற இளைஞரை டெல்லி போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து, அவரை டெல்லி அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.