இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சமூக பரவலைத் தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுதலும், சமூக விலகலுமே ஒரே வழி என்பதால் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஆனால் டெல்லியில் ஆட்சியில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல், வெளியூரில் இருந்து பிழைப்புக்காக டெல்லி வந்து அங்கு வசித்துக்கொண்டிருந்தவர்களை, பொய்யான தகவலை கூறி கமுக்கமாக டெல்லியை விட்டு கிளப்பியதாக உத்தர பிரதேச மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. 

டெல்லியில் ஆட்சியில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மோசமான அரசியலை செய்கிறது. பிழைப்புக்காக டெல்லியில் வசித்தவர்களிடம், அவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்வதற்காக உத்தர பிரதேச எல்லையில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறி டெல்லியிலிருந்து கிளப்பிவிட்டதாக உத்தர பிரதேச அரசு குற்றம்சாட்டியுள்ளது. 

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு டெல்லி அரசு, தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை துண்டித்து உத்தர பிரதேச எல்லையில் விட்டுவிட்டதாக உத்தர பிரதேச அரசு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உத்தர பிரதேச எல்லையில் அவர்களை அழைத்து செல்வதற்காக பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக, இல்லாத ஒரு விஷயத்தை கூறி விரட்டிவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஆம் ஆத்மி அரசு, அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காக இப்படியொரு புரளியை கிளப்பிவிட்டது என்று உத்தர பிரதேச அரசு குற்றம்சாட்டியிருக்கிறது.

மேலும், டெல்லி அரசு கிளப்பிவிட்ட மக்கள், உத்தர பிரதேச எல்லையில் இருப்பதை அறிந்த உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், நள்ளிரவு வரை விழித்திருந்து, உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த அந்த மக்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச்செல்ல பேருந்து வசதிகளை ஏற்படுத்தி கொடுத்ததாகவும் உத்தர பிரதேச அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரவோடு இரவாக, 1000 பேருந்துகளை ஏற்பாடு செய்து, அப்போதே டிரைவர், கண்டர்களை அழைத்து அந்த மக்களை பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தர பிரதேச எல்லையில் இருந்த மக்களை கான்பூர், பால்லியா, வாரணாசி, கோரக்பூர், அஸாம்கார், ஃபைஸாபாத், பாஸ்டி, பிரதாப்கார், சுல்தான்பூர், அமேதி, ரேபரேலி, கோண்டா, எடாவா, பாரைச், ஷ்ரவஸ்தி ஆகிய ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக உத்தர பிரதேச அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.