இறந்த மனைவியின்  உடலை எடுத்து செல்ல மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி தர மறுத்ததால் கணவர் தனது தோளில் சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் படூன் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நேற்று உயிரிழந்தார்.இதையடுத்து அவரின் சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்ல பெண்ணின் கணவர் அமரர் ஊர்தியை மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்க அவர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது தோளிலேயே சடலத்தை சுமந்து சென்ற கணவர் வழியில் சென்ற டெம்போ ஓட்டுனர்களிடம் தன்னை வீட்டில் இறக்கிவிடும் படி கெஞ்சியது நெஞ்சை உருக்கும் விதத்தில் இருந்தது.
இதனிடையில் மருத்துவமனையில் இரண்டு அமரர் ஊர்திகள் உள்ளது எனவும், அதை யார் கேட்டாலும் நாங்கள் கொடுப்போம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து பேசிய தலைமை மருத்துவ அதிகாரி, சம்பவம் குறித்து விசாரணை நடந்த உத்தரவிட்டுள்ளேன். இதில் தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இதே போல கடந்த 2016 ஆம் ஆண்டு   ஒடிஷா மாநிலம், காலந்தி மாவட்டம் ,பவானிபட்டினா டிபி மருத்துவமனையில் தனாமஜி (42) என்பவர் தனது மனைவியை டிபி சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவரது மனைவி இறந்துவிட்டதால் அவர் மனைவியை 60கி.மீ தூரத்தில் உள்ள கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதியை செய்து தராததால் அவரே தனது மனைவியின் உடலை சேலையால் சுற்றிக் கட்டினார்.

தனது மகளையும் அழைத்துக்கொண்டு ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இந்த தகவல் டிவி மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு பரவவே, அவர்கள் அனைத்தையும் லைவ் செய்தனர். இந்த காட்சிகள் நாடு முழுவதும் வெளியாகி பெரும் பாரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறுப்பிடத்தக்கது.