எல்லைப் பகுதியான சிக்கிம் மாநிலம் டோக்லாமில் படைகளை திரும்பப் பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் முடிவு செய்துள்ளன. இதனால் கடந்த இரண்டரை மாதங்களாக நீடித்து வந்த பதற்றம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியா சீனா, இடையே 3,788 கி.மீ. தூரத்திற்கு நில எல்லை செல்கிறது. இங்கு இந்தோ – திபெத் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாட்டு எல்லையில் சிக்கிம் மாநிலம் டோக்லாம் பகுதி அமைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி இந்த பகுதியை ஆக்கிரமிக்க சீன ராணுவ முயற்சி செய்தது. இதற்காக சாலை அமைக்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டது.

இதுபற்றி அறிந்ததும் இந்திய வீரர்கள் டோக்லாமில் குவிக்கப்பட்டு சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ராணுவம் அளித்துள்ள தகவலின்படி சுமார் 350 வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.. இதற்கிடையே இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இந்த நிலையில், எல்லையில் இருநாடுகளும் தங்களது படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சம் நேற்று தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங் பெய்ஜிங்கில் அளித்த பேட்டில், ‘‘ சீனா தனது இறையாண்மையை பாதுகாக்கும். டோக்லாம் எல்லையில் நிலைமையை பொறுத்து தேவையான நடவடிக்கைகளை சீனா எடுக்கும். எல்லையில் கண்காணிப்பு பணியை சீனா தொடர்ந்து மேற்கொள்ளும்’’ என்றார்.

இது தொடர்பாக வெளியுறவு அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எல்லையில் படைகளை திரும்ப பெறுவதற்கு முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா மட்டும் படைகளை திரும்பப் பெற முடிவு செய்திருந்தால், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ள தேவை ஏற்பட்டிருக்காது. கடந்த சில வாரங்களாக டோக்லாம் விவகாரம் குறித்து தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது, இந்தியாவின் நிலைப்பாடு பற்றி சீனாவிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் எல்லையில் இருநாட்டு படையையும் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது. தற்போது படைகள் திரும்பப் பெறப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.