காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்துத் தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி  கூறியுள்ளார்.

காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 4 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் இருந்து முறையாகத் தண்ணீர் திறந்து விடப்படாததால் தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுவருகின்றன.

சித்தராமையா முதல்வராக இருந்தபோது, 66.5 டி.எம்.சி. தண்ணீர் சேகரிக்கக் காவிரி  நதியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட 5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மேகதாதுவில் அணைக் கட்டினால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாலை வனமாகிவிடும் என்று தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதைதொடர்ந்து மத்திய அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அணைக் கட்டும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது.

எனினும், கடந்த  5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக பட்ஜெட்டில் மீண்டும் மேகதாது பகுதியில் அணை கட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி  முன்னணி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகத்தைச் சமாதானம் செய்யும் வகையில் விரைவில் தமிழக அரசியல் தலைவர்களைச் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நானும் ஒரு விவசாயியாக, தமிழக விவசாயிகளின் மனநிலையை உணர்ந்ததால் அணை நிரம்பும் முன்பே கபினியில் இருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டேன் என்று சுட்டிக்காட்டிய குமாரசாமி மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதை தவிர்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அணை கட்டுவதற்குத் தமிழக அரசியல் தலைவர்களையும் விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச ஆர்வமாக உள்ளதாகவும், அணை கட்டினால் இரு மாநிலமும் பயன்பெறும் எனவும் கூறியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவது புதிய திட்டமல்ல. ஏற்கனவே உள்ளதுதான். காவிரி நடுவர் மன்றத்தால் கண்டுகொள்ளப்படாத பெங்களூரு நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய புதிய அணை உதவும். தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே 85 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இயற்கை கை கொடுத்தால் அதிக தண்ணீர் திறந்து விடப்படும்” என கூறியுள்ளார்.