ஆட்சி, நிர்வாகம், நீதி, பத்திரிகை ஆகிய நான்கு துறைகளும் ஜனநாயகத்தின் நான்கு தூண்கள். ஆட்சி, நிர்வாகத்தின் நேர்மை கேள்விக்குள்ளாகும்போது நீதியை நாட்ட வேண்டிய கடமை நீதித்துறையினுடையது. 

ஆட்சி, நிர்வாகத்தால் பாதிக்கப்படும் சாமானியனின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் தான். அதிலும் இந்தியாவில் மிகவும் உயர்ந்த நீதி அமைப்பு உச்சநீதிமன்றம். அண்மைக்காலமாக உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் கேள்விக்குள்ளாகின்றன. இதனால் நீதித்துறையின் மீதான சாமானிய மக்களின் நம்பிக்கை குறையும் அபாயம் உள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் நிலவும் சில குறைபாடுகள் மற்றும் நீதிபதிகளிடையேயான கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றைக் களைந்து நீதிமன்றத்தின் மற்றும் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய இடத்தில் நீதித்துறை இருப்பதையே  அண்மைக்கால சம்பவங்கள் உணர்த்துகின்றன. நீதிபதிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு நீதியை பாதிக்குமா? என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் உள்ளது. 

நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஜனவரி 12ம் தேதி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய் மற்றும் மதன் பி லோகூர் ஆகிய நால்வரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அப்போது, உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவே தன்னிச்சையாக எடுக்கிறார். வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. சில முக்கிய வழக்குகளை குறிப்பிட்ட நீதிபதிகளுக்கே ஒதுக்குகிறார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

ஜனநாயகத்தை காக்க வேண்டிய உச்சபட்ச நீதி அமைப்பான உச்சநீதிமன்றத்திலேயே ஜனநாயகம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தது தேசிய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்றத்தில் சில விஷயங்கள் ஒழுங்கில் இல்லாததால் அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தி, அது பலனளிக்கவில்லை என்பதால்தான் பத்திரிகையாளர்களை சந்தித்ததாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேசிய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த நிகழ்விற்கு பிறகு, இதுதொடர்பான வாதங்கள் எழ ஆரம்பித்தன. தலைமை நீதிபதி தன்னிச்சையாகவும் பாரபட்சமாகவும் செயல்படுகிறார் என மூத்த நீதிபதிகளே குற்றம்சாட்டியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்வது மற்றும் நீதிபதிகள் அடங்கிய அமர்வை உருவாக்குவதற்கு விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் வழக்குகள் ஒதுக்கப்படுவதில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும் எனவும் லக்னோவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் சந்திரசூட் அடங்கிய அமர்வு, உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை ஒதுக்கீடு செய்வது, நீதிபதிகள் அமர்வை உருவாக்குவது ஆகியவை எல்லாம் தலைமை நீதிபதியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அவற்றிற்கெல்லாம் ஏற்கனவே விதிகள் உள்ளன எனக்கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் இதேபோன்ற மற்றொரு வழக்கை மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷணும் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், இதுபோன்ற மற்றொரு வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளதால், வேறு ஒரு அமர்வு மட்டுமே விசாரிக்க வேண்டும் எனவும் பிரசாந்த் பூஷண் கோரியிருந்தார். 

தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மூத்த நீதிபதியான  செல்லமேஸ்வர், இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார். எனது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. எனவே இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை. எனது உத்தரவில் 24 மணிநேரத்திற்குள் மாற்றம் வருவதை நான் விரும்பவில்லை என நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்துவிட்டார்.

நீதிபதி செல்லமேஸ்வரின் கருத்து கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்து. எனது தீர்ப்பு 24 மணி நேரத்தில் மாற்றப்படுவதை நான் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். அப்படியென்றால், ஒரு நீதிபதி அமர்வு கொடுத்த தீர்ப்பை, கருத்து வேறுபாடு கொண்ட மற்றொரு நீதிபதி அமர்வு மாற்றிவிடுமா? பிறகு என்ன உச்சநீதிமன்ற தீர்ப்பு? என்ற எண்ணம் சாமானிய மக்களின் மனதில் எழுகிறது. 

காவிரி விவகாரத்தில் கூட, 6 வார கால அவகாசம் வழங்கி திட்டம் ஒன்றை செயல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அதை செயல்படுத்தாத மத்திய அரசு கடைசி நாளில் திட்டத்திற்கு விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்தது. நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசு மீது தமிழக அரசின் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்ன ஆனது? ஏற்கனவே தீர்ப்பு விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஏன் கால அவகாசம் வழங்கியது நீதிமன்றம்? நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசு செயல்படுத்தவில்லை என்றால், நீதிமன்றத்தால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? சாமானியனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு மட்டும்தான் செயல்படுத்தப்படுமா? என சாமானிய மக்கள் பல கேள்விகளை எழுப்புகின்றனர்.

ஏற்கனவே மக்கள் மனதில் இவ்வளவு கேள்விகளும் சந்தேகங்களும் உள்ள நிலையில், உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி, தனது தீர்ப்பு மாற்றப்படும் என்பதால் விசாரிக்கவே முன்வரவில்லை என்பது நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை இழக்க செய்யும் வகையில் உள்ளது. நியாயத்தை வேண்டும் ஒவ்வொரு குடிமகனின் கடைசி நம்பிக்கையே நீதிமன்றம் தான். அதிலும் நீதித்துறையின் உயர்ந்த அமைப்பான உச்சநீதிமன்றத்தில், நீதிபதிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு, நீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதையே நீதிபதி செல்லமேஸ்வரின் கருத்து வெளிப்படுத்துகிறது. 

எனவே நீதிமன்றத்திற்கு சென்றால் நீதி கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கையையும் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளின் மீதான நம்பகத்தன்மையையும் மக்கள் இழந்துவிடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டிய தருணத்தில் நீதித்துறை உள்ளது.