இசுலாமிய சிறுமி ஒருவர், பொட்டு வைத்துக் கொண்டு குறும்படத்தில் நடித்ததால், மதரசா மத பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் உம்மர் மலயில். இவருடைய மகள் ஹென்னா மலயில், 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி படிப்பில் முதலிடம் பெற்று வருவதுடன், இசுலாமிய மத பாடசாலையான மதரசாவிலும் பயின்று வந்தார்.

ஹென்னா மலயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த படத்தில், ஹென்னா நெற்றியில் சந்தனப்பொட்டு வைத்து இந்து பெண்ணாக நடித்திருந்தார். குத்து விளக்கு ஏற்றுவது போன்றும் அந்த குறும்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குறும்படம் ரம்ஜான் சமயத்தில் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், ஹென்னா மலயில், இசுலாமிய மத பாடசாலையான மதரசாவில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொட்டு வைப்பது, விளக்கேற்றுவது போன்றவை மத கோட்பாடுகளுக்கு மாறானது என விளக்கமளிக்கப்பட்டது.

இது குறித்து ஹென்னாவின் தந்தை உம்மர் மலயில், தனது பேஸ்புக் பக்கத்தில், எனது மகள் பாட்டு, பேச்சு மற்றும் நடனத்தில் அதீத ஆர்வம் கொண்டவள். அத்துடன் பள்ளி படிப்பிலும், மத பாடசாலையிலும் எப்போதும் முதலிடம் பிடித்து வருகிறாள்.

நடந்து முடிந்த 5 ஆம் வகுப்பு மதரசா பொது தேர்வில் 5 ஆம் இடம் பிடித்தாள். அவர் குறும்படத்தில் பொட்டு வைத்துக் கொண்டு நடித்ததால் அவளை மத பாடசாலையில் இருந்து நீக்கி விட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.