அரியானா, பஞ்ச்குலா நகரில் தேரா சச்ச சவுதா அமைப்பினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய பஞ்ச்குலா போலீஸ் துணை ஆணையரைசஸ்பெண்ட் செய்து மாநில அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

 சாமியார் குர்மீத் சிங்குக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வந்தால், அவரின் ஆதரவாளர்கள் பெரிய கலவரத்தில் ஈடுபடும் அபாயம் இருப்பதாக உளவுத்துறை முன்பே தெரிவித்து இருந்தது.

ஆனால், அதைப் பொருட்படுத்தால், பஞ்ச்குலா போலீஸ் ஆணையர் அசோக் குமார், பயங்கர ஆயுதங்களை தொண்டர்கள் கொண்டுவர மட்டுமே 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால், 4 பேருக்கு மேல் பஞ்ச்குலா நகரில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கவில்லை. இதன் காரணமாக அதிக அளவு தொண்டர்கள் பஞ்ச்குலாநகரில் கூடவும், கலவரம் ஏற்படவும் காரணமாக அமைந்தது என  அரசு கருதியது. இதையடுத்து, போலீஸ் துணை ஆணையர் அசோக் குமாரை அரசு இடைநீக்கம் செய்தது.

இது குறித்து அரியானா உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராம் நிவாஸ் கூறியதாவது-

பஞ்ச்குலா நகரில் ஏற்பட்ட கலவரத்துக்கு ஏராளமான பாதுகாப்பு குளறுபடிகள்தான் காரணம் எனத் தெரியவந்தது. அதனால், போலீஸ் துணை ஆணையர் அசோக்குமாரை சஸ்பெண்ட் செய்துள்ளோம். ஆயுதங்கள் யாரும் எடுத்துவரக்கூடாது என்று மட்டுமே போலீஸ் ஆணையர் அசோக்குமார் 144 தடை உத்தரவு போட்டுள்ளார், ஆனால், 4 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கவில்லை.

குறைபாடு உள்ள 144 உத்தரவுகளை போலீஸ் ஆணையர் பிறப்பித்ததன் காரணமாகவே, தேரா சச்சா அமைப்பைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள்பஞ்ச்குலாவில் நகரில் குவிந்தனர்.

நீதிமன்ற தீர்ப்பு பாதகமாக அமைந்தால் மிகப்பெரிய அளவில் கலவரம் வெடிக்கும்என்று தெரிந்திருந்தும், ஊரடங்கு உத்தரவுகளை வலுவாக பிறப்பிக்காதது கலவரம் ஏற்பட முக்கியக் காரணமாக அமைந்தது.

நான் பஞ்ச்குலா நகருக்கு கடந்த 24-ந்தேதி வந்தபோது, ஏன் இந்த அளவுக்கு தேராசச்சா அமைப்பு தொண்டர்கள் குவிய அனுமதி அளித்தீர்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால், ஆபத்தான ஆயுதங்கள் எடுத்துவர மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால், 5 பேருக்கு மேல் யாரும் கூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை,பஞ்ச்குலா நகருக்குள் வரும் தொண்டர்களையும் தடுக்கவில்லை. குளறுபடியான உத்தரவை பிறப்பித்த காரணத்தால் டி.சி.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.